நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. மேலும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரத்தை மீனவர்கள் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிதாக கூறி 3 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.