அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாலை விபத்தில் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என்ற இரண்டு இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேக்னாவும், பாவனாவும் எட்டு நண்பர்களுடன் இரண்டு தனித்தனி கார்களில் பயணம் செய்துள்ளனர். அலபாமா ஹில்ஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார், ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் சம்பவ இடததிலேயே மேக்னா ராணியும், கடியால பாவனாவும் உயிரிழந்தனர். மேலும் அவர்களது நண்பர்கள் 4பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேக்னாவின் தந்தை நாகேஸ்வர ராவ், கார்லாவில் மீ-சேவா மையத்தை நடத்தி வருகிறார், பாவனாவின் தந்தை முல்கனூர் கிராமத்தின் துணை சர்பஞ்சாக பணியாற்றுகிறார். தங்களது மகள்களின் உடல்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான விரைவான ஏற்பாடுகளை செய்யுமாறு இந்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





