கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில், டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகம் அருகே உள்ள ஹைலேண்ட் ஓல்ட் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெஃப் அலிங்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு துப்பாக்கிக் காயத்துடன் கிடந்தவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி(20) என அடையாளம் காணப்பட்டதாக கனடா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டொராண்டோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய மருத்துவ மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும் அது உறுதியளித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முனபு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா என்ற பெண், தனது ஆண் நண்பரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி தற்போது சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் டொராண்டோவில் நடந்த 41வது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.





