September 10, 2026

லாரி மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து: 17 பேர் உடல் கருகி பலி

கர்நாடகாவில் இன்று அதிகாலை அதிவேகமாக வந்த லாரி மோதி ஸ்லீப்பர் சொகுசு பேருந்து தீப்பிடித்ததில் 17 பயணிகள் உடல் கருகி பலியாயினர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கோகர்ணா நோக்கி தனியார் ஸ்லீப்பர் சொகுசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 25) அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த லாரி தடுப்புச்சுவரை கடந்து சொகுசு பேருந்து மீது மோதியது. இதனால் பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை வசதி கொண்ட பேருந்து என்பதால் உறக்கத்தில் இருந்த பயணிகள் வெளியே வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. இதனால் பேருந்துக்குள் இருந்த 17 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 17 பேர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

போலீஸார் முதல்கட்ட விசாரணையின்படி, 32 இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்தில் 15 பெண்கள், 14 ஆண்கள் என 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலை-48-ல் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, வாகனங்கள் வரிசையில் நின்றன.

You may have missed