அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

அதிமுக ஒன்று சேர வேண்டும் என்ற குரல் எழுப்பும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை இணைக்க வேண்டும் என்று பாஜக முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. வேண்டுமென்றால் பாஜக கூட்டணியில் அவர்கள் போட்டியிட்டால் தொகுதிகள் ஒதுக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர்.நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று (டிச.24) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,” ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார். அத்துடன் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

அதிமுக என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம். நூறு நாள் வேலைத திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அந்த திட்டம் ஏற்கெனவே இருந்த நிலையில் தொடர்ந்தால் மக்களுக்கு நல்லதுதான்” என்று கூறினார்