திருமணமான இளைஞர் ஒருவர் தனது மைத்துனியை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா மாவட்டத்தில் உள்ள கோபால்பூரைச் சேர்ந்தவர் ஷாருதீன் என்ற ஷேரா(30). இவருக்கு திருமணமாகி ஆசாத்(2) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், தனது மைத்துனியை ஷாருதீன் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது த்ந்தையான அப்துல் ஹமீதிடம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள 60 அடி செல்போன் கோபுரத்தில் ஏறிய ஷாருதீன், தனது மைத்துனியை திருமணம் செய்து வைத்தால் தான் இறங்குவேன் என்று போராட்டம் நடத்த தொடங்கினார். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அவரது குடும்பத்தினர் இறங்கி வருமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், ஷாருதீன் கீழே இறங்க மறுத்து விட்டார். இந்த தகவல் அறிந்த சஹார் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
காவல் நிலைய அதிகாரி ரமேஷ் சிங் மற்றும் எஸ்.ஐ அப்துல் சத்தார் ஆகியோர் போலீஸ் படைகளுடன் வந்து அந்த இளைஞரை கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார். நீண்ட நேரமாக செல்போன் கோபுரத்தில் இருந்த ஷாருதீனைக் காப்பாற்ற தீயணைப்பு படை மற்றும் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். யாரும் மேலே வந்தால் குதித்து விடுவேன் என்று ஷாருதீன் மிரட்டினார். இதனால் செல்போன் டவரில் ஏறி காப்பாற்றும் நடவடிக்கையும் தாமதமானது.
நீண்ட நேரமாக போலீஸார் கெஞ்சி பார்த்தும் ஷாருதீன் பிடிவாதமாக இறங்க மறுத்தார். பல மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது எனத் தெரியாமல் போலீஸார் திண்டாடினர். கடைசியில், ஷாருதீனின் மைத்துனியை அழைத்து வந்த பின்பு, செல்போன் கோபுரத்தில் இருந்து ஷாருதீன் கீழே இறங்கி வந்தார். அவரை தீயணைப்பு படையினரும், போலீஸாரும் பத்திரமாக இறக்கினர்.
இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். மைத்துனி மீது கொண்ட ஒருதலைக் காதலால் மன அழுத்ததிற்கு ஷாருதீன் உள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை எச்சரித்து குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். ஷாருதீனுக்கு மனநல பரிசோதனை செய்வதாகவும், உரிய சிகிச்சை கொடுப்பதாவும் அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் கோபால்பூர் கிராமத்தில் பலமணி நேரம் பரபரப்பு நிலவியது.






