கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக வைத்துள்ளது. அத்துடன் மீனவர்களின் வலை, படகுகள், மீன்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து விடுகிறது. மறுபுறம் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களைத் தாக்கி கொள்ளையில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையரின் இந்த அடவாடி நடவடிக்கைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், இலங்கை கடற்படையின் அட்டூழியம் எல்லை இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று (டிச.23) அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக்கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






