கேரளாவில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நடிகைகள் பார்வதி, நடிகை ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பாடகி சின்மயி ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
கேரளா மாநிலம், கொச்சியில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், நடிகர் திலீப்பை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கில்6 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை டிச.12-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு(அம்மா) தெரிவித்துள்ளது.
இதற்கிடையே திலீப் விடுதலைக்கு எதிராக கேரளா திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ” இது நீதியா?. அவர் (பாதிக்கப்பட்ட நடிகை) தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தை மாற்றியது. நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக, “அவள கோபம்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்து ரம்யா நம்பீசனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை குறித்து நடிகை ரிமா கல்லிங்கல் ஏற்கெனவே குரல் கொடுத்துள்ளார். அவர் இதேபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதும். எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையானவர்” என்று தலைப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாக, பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில்,, “இன்று இந்த தீர்ப்பு எப்படி இருந்தாலும், நான் உயிர் பிழைத்தவருடன் நிற்கிறேன். எப்போதும். பெண்ணே, நீ ஒரு ஹீரோ. நீ இருந்திருக்கிறாய், எப்போதும் இருப்பாய். உனக்காக நிற்பது போல் நடித்து, நீதிமன்றத்தில் முக்கியமான சமயங்களில் தங்கள் அறிக்கைகளை மாற்றிய அனைவருக்கும், பெண்கள் உட்பட – அவர்கள் தகுதியானதைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.






