விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அவ்வப்போது காங்கிரஸில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு வைக்கும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அப்போது விஜய்யிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனால் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசத் தொடங்கினர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுவதற்கு 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அக்குழு நடத்தியுள்ளது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பான கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் குழு கொடுத்துள்ளது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதனை அவரே உறுதி செய்துள்ளார். இதனால் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் இன்று (டிசம்பர் 6) வினா எழுப்பினர்.
இதற்கு செல்வப்பெருந்தகை, “பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவோடு பேச நாங்கள் ஐவர் குழு அமைத்திருக்கிறோம். அவர்கள் திமுகவோடு பேச்சு வார்த்தை நடத்துவது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இதைப் பற்றி நாங்கள் பேசவும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது” என்று பதிலளித்துள்ளார்.






