திருப்பரங்குன்றம் விவாகரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் பாரம்பரியமாகவும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவால் மதுரையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க கோரி திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர் பாலு, மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். திருச்சி சிவா கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், தமிழ்நாட்டில் மத மோதல் மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒரு கும்பல் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.