3 ஆண்டு சிறை: ரயிலில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் ரயில்வே பாதுகாப்ப படை எச்சரித்துள்ளது.

வாகனங்களில் வெளியூர் பயணம் செல்பவர்கள் சக்கரத்திற்கு எலுமிச்சை பழம் வைத்து கற்பூரம் காட்டி விட்டு பயணத்தை தொடர்வார்கள். தற்போது சபரிமலை சீசனுக்கு ரயிலில் பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், சபரிமலை சீசன் துவங்கி விட்டது. இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஐயப்ப, பக்தர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பயணிக்கும்போது, விளக்கு மற்றும் கற்பூரங்களை ஏற்றி வைத்து வழிபடுவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், இந்திய ரயில்வே சட்டத்தின்படி எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு, கியாஸ் சிலிண்டர், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது. கற்பூரம், விளக்கு என, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, ரயில்களில் பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவார்கள். அந்த வகையில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை, பயணிகள் எடுத்துச் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகளை பற்ற வைக்கும் நபர்கள் குறித்து, சக பயணியர் உடனே டிக்கெட் பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, 139 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.