பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பிரபல மாவோயிஸ்ட தலைவர் மத்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீஸாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையல் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச சேர்ந்த பிரபல மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா உள்ளிட்ட 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவரது மனைவி ராஜே என்ற ராஜக்காவும் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட மத்வி ஹித்மா, மக்கள் கொரில்லா ராணுவ பட்டாலியன்(PLGA) 1 படையை வழி நடத்தியவர் ஆவார். இவரை கைது செய்வோருக்கு 7 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. தெற்கு சத்தீஸ்கரில் செயல்படும் தடைசெய்யப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த மத்வி ஹித்மா, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர் என்று கூறப்படுகிறது.

இவர் தலைமையில் கடந்த 2010-ம் ஆண்டு தண்டேவாடாவில் நடந்த தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 2013-ம் ஆண்டு ஜிராம் காட்டியில் நடந்த தாக்குதலில் காங்கிரஸ் உயர் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். 2021-ம் ஆண்டு சுக்மா-பிஜாப்பூர் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் எல்லையில் மாவோயிஸ்டுகளின் மறைவிடங்கள் உள்ளன. அங்கு நடந்த தாக்குதலில் தான், மத்வி ஹித்மா உள்ளிட்ட 6 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.