ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பிற நாடுகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகபட்ச வரிகளை விதித்தார். இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்” என்றார்.
குடியரசு கட்சி செனட் சபை எம்.பி லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். இதற்கும் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.






