September 10, 2026

வேலைக்கே செல்லாமல் சம்பளமாக ரூ.37.54 லட்சம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரியின் மனைவி!

இரண்டு அலுவலகங்களில் ஒருநாள் கூட வேலைக்குச் செல்லாமல் லஞ்சத்தை ரூ.37.54 லட்சத்தை சம்பளமாக  ஐ.டி அதிகாரியின் மனைவி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்​தான் மாநிலம், தகவல் தொழில்​நுட்ப துறை​யின் இணை இயக்​குந​ராக பணி​யாற்றுபவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி பூனம் திக்​ஷித். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள், ராஜஸ்​தான் மாநில அரசின் ஒப்பந்தங்களைப் பெற்று வந்துள்ளன.

இந்த ஒப்பந்தங்களை இந்த நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குநரான பிரத்யுமான் திக்​ஷித் வழங்கியுள்ளார். இதற்காக இவர் லஞ்சமாக, இந்த இரண்டு நிறுவனங்களிலும் தனது மனைவி பூனம் திக்​ஷித்தை ஊழியராக பணிபுரிவதாக கணக்குகாட்டி வேலைக்கு அனுப்பாமலேயே சம்பளம் பெற்று வந்துள்ளார். இதையறிந்த ஒருவர், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த பிரச்னை குறித்து லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை நடத்த கடந்​த ஆண்டு உத்​தர​விட்​டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை பூனம் திக்​ஷித்​தின் ஐந்து வங்கிக் கணக்​கு​களில் ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் சம்​பள​மாக ரூ.37,54,405 செலுத்​தி​யது கண்​டறியப்​பட்​டது. ஆனால், இந்த காலக்​கட்​டத்​தில் இரண்டு அலு​வல​கங்​களுக்​கும் பூனம் திக்​ஷித் ஒரு நாள் கூட வேலைக்குச் சென்​ற​தில்​லை.

ஆனால்,அவர் வேலைக்கு சென்​ற​தாக கணக்கு காட்​டப்​பட்ட போலி வருகைப் பதிவேட்​டுக்​கு, அவரது கணவர் பிர​தி​யு​மான் திக்​ஷித் ஒப்​புதல் அளித்​துள்​ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அரசின் மாநில உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியான  பிரத்​யு​மான் திக்​ஷித் மீது உயர்நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.