April 15, 2026

பிஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதி வழங்கியுள்ளோம்… பிரதமர் மோடி பிரசாரம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிஹார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கினார். சமஸ்திபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ” பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார். அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் மோசடிகளில் ஈடுபட்டன.

அவர்களின் தலைவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கர்ப்பூரி தாக்கூரின் விருதை திருட முயற்சி செய்தனர். பிஹார் மக்கள் காட்டு ராஜ்ஜியத்தை புறம் தள்ளிவிட்டு, நல்லாட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நிதிஷ் குமார் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை பிஹாரில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் இருந்த போது ஒதுக்கப்பட்ட நிதியை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியது” என்று பேசினார். முன்னதாக கர்ப்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவருடன் பிஹார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் உடனிருந்தார். கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்.