கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யை கைது செய்யக்கோரி தமிழ்நாடு மாணவர் சங்கம் அமைப்பு சார்பில் மாநிலம் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கட்சி தலைவர் நடிகர் விஜய், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜய் நேற்று முன்தினம் பிற்பகல், 12 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த விஜய், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் வழியாக வேலுச்சாமிபுரத்திற்கு வர நீண்ட நேரமானது.
கூட்ட நெரிசலால் மயக்கம்
நடிகர் விஜயைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் நேற்றுமுன்தினம் காலை 10 மணி முதலே, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் குவியத் தொடங்கினர். நீண்ட நேரமாகியும் விஜய் வராததால் மக்கள் பசி, மயக்கம், வெயிலால் ஏற்பட்ட கிறக்கத்தால் மயங்க ஆரம்பித்தனர். இரவு 7 மணிக்கு பிரச்சார இடத்திற்கு விஜய் வந்து பேசத் தொடங்கினார். அப்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் பிரசார வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் நகர இடமின்றி, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால், நெரிசல் ஏற்பட்டது. உடனே பேச்சை நிறுத்திய விஜய், மயங்கி விழுந்தவருக்கு தண்ணீர் கொடுக்கும்படி மைக்கிலேயே கூறினார். மேலும், பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே, மயங்கி விழுந்தவரின் பகுதியில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவினர். அப்போது, ஆம்புலன்சை வரவழைத்த விஜய், மயங்கியவரை மீட்டு அழைத்து செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் பேச தொடங்கினார். இருந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தொடர்ந்து மயங்கி விழ துவங்கினர்.
41 பேர் மரணம்
அத்துடன் அங்கிருந்த சாலையோர பள்ளத்திலும் சிலர் விழுந்தனர். அதனால், நிலைமைமோசமானதால், 7:15 மணிக்கு விஜய் பேசுவதை முடித்துக் கொண்டு புறப்பட தயாரானார்.அவரைப் பார்ப்பதற்காக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர்முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில், குழந்தைகள் மூச்சு பேச்சின்றி மயங்கி விழுந்தனர். ஆனால், அங்கு விஜய் கிளம்பி திருச்சி விமான நிலையம் சென்று விட்டார். இதனால் மயங்கி கிடந்தவர்களை மிட்டு தனியார் மருத்துவமனைகள், கருர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
உடனே விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தை உலுக்கிய இந்த கோரச்சம்பவத்தைக் கேள்விபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இரங்கல் தெரிவித்ததுடன், மருத்துவமனைக்கு உடனடியாக அமைச்சர்கள், மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகளை விரைந்து செல்ல உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததுடன், அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை கமிஷனையும் அமைத்தார். அத்துடன் உடனடியாக தலைமைச் செயலகத்தில் கூட்டத்தை நடத்தினார்.அன்று இரவே தனி விமானம் மூலம் இரவோடு இரவாக கரூருக்கு விரைந்தார். கரூர் மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கள் ஆகியோர் உடனடியாக விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.
பிரதமர் மோடி இரங்கல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய விஜய்
ஆனால், விபத்து நடந்த இடத்தில் இருந்து உடனடியாக திருச்சி சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் விஜய் தப்பிச்சென்றார். இந்த விபத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கும், பதிலளிக்காமல் விஜய் சென்று விட்டார். கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நான்கு மணி நேரம் கழித்து விஜய் இரங்கல் அறிக்கையை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரைப் பார்ப்பதற்காக வந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி ரசிகர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் ஓடிப்போன விஜய் என தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் கண்டனம் வலுத்து வருகிறது.
கண்டன போஸ்டர்
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டை முற்றுகையிட்டு தமிழக மாணவர் மன்றத்தினர் நேற்று (செப்டம்பர் 28) போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மாநகர் உள்பட மாநிலம் முழுவதும் தமிழக மாணவர் சங்கத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், தமிழக அரசே, 39 அப்பாவி உயர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


