
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். அவளுடைய குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தர்குல்வா காவல் நிலையத்தில் அவளது பெற்றோர் அடுத்த நாள் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மோப்ப நாய், டிரோன் உதவியுடன், தேடினர்.
இந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின் கிராமத்திற்கு அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ழுமுவதும் காயங்கள் இருந்தன. குறிப்பாக சிறுமியின் தலையில் ஆழமான காயங்கள் இருந்தன. இதனால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவளது பெற்றோர் சந்தேகிக்கின்றனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு கரும்பு வயலில் வீசப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை சந்தேகப்படுகின்றார். அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தந்தை போலீஸாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைவர் ஜிதேந்திரராவ் கூறுகையில், தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் குற்றவாளிகள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தற்போது பல சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.