தெலங்கானா: பேருந்தில் பயணச்சீட்டுக்கான சில்லறை வழங்குவதில் ஏற்பட்ட தகராறு விபரீதமாக மாறியதில், 24 வயதான பெண் பேருந்து நடத்துநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மணுகூரு பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது மவுனிகா என்ற பெண் தனது மகனுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மகனுக்கான பயணச்சீட்டைப் பெறுவதற்காக நடத்துநர் குண்ட்லா பிரவலிகாவிடம் ரூ.100 நோட்டைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ரூ.10 மதிப்பிலான பயணச்சீட்டை வழங்கிய நடத்துநர், மீதமுள்ள ரூ.90-க்கு சில்லறை இல்லாததால், பயணம் முடிந்து இறங்கும்போது பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த பயணி மவுனிகா, உடனடியாகப் பணத்தைத் திருப்பித் தருமாறு நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பேருந்து மித்தகுடெம் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மவுனிகா, பேருந்தின் வாசல் பகுதியில் இருந்த நடத்துநர் பிரவலிகாவை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரவலிகாவின் கால்கள் மீது பேருந்தின் பின்பக்கச் சக்கரங்கள் ஏறியதில், வலது கால் முற்றிலும் நசுங்கியது. இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9 நாட்களாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரவலிகா, செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை வழக்காக மாற்றிய போலீசார்!
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மவுனிகாவைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது நடத்துநர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அரசு நிவாரணம் அறிவிப்பு!
பெண் நடத்துநர் பிரவலிகாவின் மறைவுக்கு தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, தாயாருக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு இந்திரம்மா வீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, நடத்துநரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தைக் கண்டித்தும், பேருந்து ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி போக்குவரத்து ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
சில்லறை தொடர்பான சாதாரண வாக்குவாதம், ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
தவெக அரசைக் கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்? திமுக – அதிமுக மீது முஸ்தபா எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்!
BSNL ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு! ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு முகாம் – மாவட்ட வாரியான தேதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் குப்பை சேகரிப்புப் பணியில் அதிரடி மாற்றம்! தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு திட்டம்?