சென்னை:
தமிழகத்தில் சேவல் சண்டைகளுக்கு எந்தவிதமான முழுமையான தடையும் விதிக்கப்படவில்லை என்று காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிராம கோவில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 12-ம் தேதி காவல் துறை தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், “எந்தவொரு அதிகார வரம்பிலும் சேவல் சண்டை நிகழ்வுகள் நடைபெறுவதை காவல் துறை அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது” என்று உத்தரவிடப்பட்டுள்ளதன் நோக்கம் என்னவென்று விளக்கமளிக்குமாறு மாநில அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (AIG) எல். பாலாஜி சரவணன் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையானது, சேவல் சண்டைகளுக்கு எதிராக எந்தவொரு சட்டப்பூர்வமான முழுத் தடையையும் விதிக்கவில்லை. சூதாட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில், சேவல் சண்டைகளின் போது சேவல்களின் கழுத்தில் கத்திகள் அல்லது பிளேடுகளைக் கட்டுவது, சேவல்களின் கண்களைத் தைப்பது போன்ற கொடூரமான செயல்களைத் தடுப்பதற்காகவே அந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
நீதிமன்றங்களின் முந்தைய உத்தரவுகளைச் செயல்படுத்தும் வகையில்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவே தவிர, பாரம்பரியமான எந்தவொரு சட்டப்பூர்வமான செயல்பாட்டையும் முடக்கும் நோக்கம் காவல் துறைக்குக் கிடையாது” என்று அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்

More Stories
சென்னையில் கொடூரம்: தூங்கிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி கைது!
மதுரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஒரே நாளில் நிகழ்ந்த 3 படுகொலைகளால் மக்கள் பீதி!
தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்