September 19, 2026

தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்

சென்னை:

முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம்:

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் கிளோஸ்டர்ஸ் நகரில், அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளார். உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்பது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோரின் அழைப்பை ஏற்று அவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், 1,000-க்கும் அதிகமான முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.

அரசின் அணுகுமுறையில் மாற்றம்:

பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு, உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து டாவோஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் நேரடியாகக் கலந்துகொள்வதன் மூலம், தமிழக அரசின் முதலீட்டு ஈர்ப்பு மற்றும் தொழில் கொள்கை தொடர்பான அணுகுமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை டாவோஸ் உலகப் பொருளாதார மாநாடுகளில் துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே பெருமளவில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக இந்நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.