“20 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தபோதும் நான் நினைத்த பல விஷயங்களைச் சாதிக்க முடியவில்லை-திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தன்னைச் சுற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் அரசியல் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்றும், தவெக அரசில் தனது பரிந்துரையின் பேரில் நியமனங்கள் நடைபெறுகின்றன என்ற தகவல்களுக்கு எந்தவித உண்மையும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற விசிக மண்டல செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழர்களின் ஒற்றுமைக்கு சாதியே மிகப்பெரிய தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், பிற அரசியல் கட்சிகளில் இருந்து விலகி வருபவர்கள் விசிகவில் இணைவதற்குப் பதிலாக திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளைத் தேர்வு செய்வதாகவும், இதன் பின்னணியில் சாதிய மற்றும் மதவாத அரசியல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் தவெக அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவியும், ஒருவருக்கு துணை சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டதாகவும், அதற்கு தனது பரிந்துரையே காரணம் எனவும் சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாகக் கூறினார். இத்தகைய தகவல்கள் பிற சமூக மக்களிடையே தவெக அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“20 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தபோதும் நான் நினைத்த பல விஷயங்களைச் சாதிக்க முடியவில்லை. ஆனால் தற்போது தவெக அரசு நான் சொல்வதை கேட்கிறது, நான் பரிந்துரைக்கும் அதிகாரிகளுக்கு பதவி வழங்கப்படுகிறது என்று சிலர் பரப்புகின்றனர். இவை அனைத்தும் முற்றிலும் பொய்யான தகவல்கள். நான் கூறியதால் ஒரு போலீஸ் அதிகாரிக்கு பதவி வழங்கப்பட்டிருந்தால், பின்னர் அவரை அந்தப் பதவியில் இருந்து ஏன் மாற்றினர்? இதுவே அந்த தகவல்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறது,” என்று திருமாவளவன் விளக்கமளித்தார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக இந்தியா கூட்டணியின் முடிவை ஒட்டி விசிக தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்றும், அந்த மசோதாவை எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவும் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதமாக அமையும் என்று அவர் கூறினார்.

மேலும், நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மன் மரணம் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், பழநி கோயில் நில மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் தமிழக முதல்வர் நேரடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அரசியல் சூழலில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை மக்கள் உண்மை என நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், வதந்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் திருமாவளவன் மறைமுகமாக அறிவுறுத்தினார்.