தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ஜி-பே மூலம் ரூ.1 கோடிக்கு மேல் பரிவர்த்தனை கண்டுபிடிப்பு

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை பல இடங்களில் இரவு வரை நீடித்தது. பட்டா பெயர் மாற்றம், சிட்டா, அடங்கல், வருமானம், இருப்பிடம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் நிலம் தொடர்பான சேவைகளில் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தனிப்படைகள், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சோதனை நடத்தின. சென்னை சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜி-பே மூலம் ரூ.6 லட்சம் வரை பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது.

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணமும், ஜி-பே மூலம் ரூ.12 லட்சம் பெறப்பட்டதும் அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது. திருவள்ளூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற சோதனைகள் நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆய்வில், ஜி-பே உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பரிவர்த்தனைகள் லஞ்சமாக பெறப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.