திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்த சென்னை பக்தர் மாரடைப்பால் மரணம்: அரை மணி நேரம் நடை அடைப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சென்னை ஆவடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (80) என்ற முதியவர், தனது மனைவி மற்றும் மகன் தனசேகரனுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நேற்று பகலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த அவர், மதியம் கோயில் அன்னதான மண்டபத்தில் உணவு அருந்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்னதான மண்டபத்தை விட்டு வெளியே வந்த கோவிந்தசாமி, கோயில் வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார். பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கோவிந்தசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கோயில் வளாகப் பகுதியில் பக்தர் உயிரிழந்ததன் காரணமாக, ஆகம விதிகளின்படி நேற்று மாலை 3:00 மணி அளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நடை தற்காலிகமாக அடைக்கப்பட்டது. பின்னர் தோஷ நிவர்த்தி மற்றும் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கம்போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்தச் சம்பவம் கோயில் வளாகத்தில் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியது.

More Stories
சிவகங்கை நீர்நிலைகளில் இலவச வண்டல் – களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!
நாகர்கோவில் சிறையில் கைதி அடித்துக் கொலை: சிறை வார்டர்கள் சஸ்பெண்ட்; 8 பேர் அதிரடி கைது!
மதுரை அருகே பரபரப்பு: உளவுத்துறை காவலர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை!