மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடி பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் நின்றிருந்த மர்ம கும்பலை விசாரிக்கச் சென்ற உளவுத்துறை காவலர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மதுரை பெருங்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை, பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று நடமாடுவதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், உளவுத்துறை காவலர் ராஜா என்பவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பெருங்குடி பயணியர் விடுதி அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மூன்று நபர்களைப் பிடித்து காவலர் ராஜா தீவிர விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள காட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தப்பியோடிய கும்பல்: காவலர் ராஜா அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இருந்தபோதே, ஆத்திரமடைந்த அந்த மூன்று பேரும் திடீரென கற்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு காவலர் ராஜாவை கொடூரமாக தாக்கத் தொடங்கினர். இதில் படுகாயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் திரளுவதைக் கண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
தீவிர சிகிச்சை: தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருங்குடி போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த காவலருக்கு 16 தையல்கள் போடப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய காட்டாமங்கலத்தைச் சேர்ந்த அந்த மூன்று மர்ம நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

More Stories
சென்னை: ‘“டாஸ்மாக் கடையை மூடக் கோரிய பள்ளி மாணவிகளை தாக்கியதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா?” – சீமான்
நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்: காவலர்கள் மீதான நடவடிக்கைக்கு உதயநிதி வலியுறுத்தல்…
சேலம் : மேட்டூர் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை!!