அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக அறக்கட்டளை, சமூக பொறுப்பு நிதி மூலம் உருவாக்கப்பட்டுள்ள ‘நலம் TN’ என்ற இணையதளம் மற்றும் ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்-அப் செயலியை சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், இந்த இணையதளம் மூலம் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை எளிமையாக வழங்க முடியும் என்றார்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு சிகிச்சைகள் வழங்குதற்காக, உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில், பெரிய தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மற்றும் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெற்று வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய முறையில் செயல்படுத்தும் பொருட்டே “நலம் TN” இணையதளம் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்பட்டு, அதற்கான இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை எளிமையான முறையில் நேரடியாகவும், பாதுகாப்பாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் வழங்க முடியும்.
“நலம் TN” திட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பயன்பாட்டிற்காக சென்னையிலுள்ள Caplin Point Laboratories Ltd., நிறுவனத்தின் தலைவர் சி.சி. பார்த்திபன் மற்றும் துணைத் தலைவர் விவேக் பார்த்திபன் ஆகியோர் அந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், அப்பல்லோ மருத்துவமனையின் குழுமத் தலைமை நிதி அலுவலர் கிருஷ்ணன் அகிலேஸ்வரன் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வி. நவீன் ஆகியோர் அக்குழுமத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், ஓசூரிலுள்ள Titan Engineering and Automation Ltd., நிறுவனத்தின் CSR ஒருங்கிணைப்பாளர் ஆர். பிரபு மற்றும் முதுநிலை மேலாளர் ஹரிஹரன் ஆகியோர் அரசு மருத்துவமனைகளின் கட்டடப் பணிகளுக்காக அந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினர்.
மேலும், சென்னையைச் சேர்ந்த எஸ். சத்யா இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகப்பிரசவத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்தபோது அம்மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தன்னையும் குழந்தையையும் அன்போடும் அர்ப்பணிப்போடும் கவனித்துக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “நலம் TN” திட்டத்தில் அம்மருத்துவமனையின் சில்லறைச் செலவினங்களுக்காக QR CODE வாயிலாக ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் நன்கொடையாக வழங்கினார்.

More Stories
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்
சென்னை: ‘“டாஸ்மாக் கடையை மூடக் கோரிய பள்ளி மாணவிகளை தாக்கியதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா?” – சீமான்