செஞ்சி: செஞ்சி அருகே தாமதமாக சரக்கு ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதன் உரிமையாளர், கிளீனரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (50). இவர் வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியை சேர்ந்த சுரேந்தர் மகன் பிரேம்குமார் (39) என்பவருக்கு சொந்தமான லாரியில் கடந்த 2024 முதல், டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடன் வசந்தகுமார் (25) என்பவர் கிளீனராக வேலை செய்து வருகிறார். கடந்த 3ம்தேதி மங்களூரில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு கெமிக்கல் லோடு ஏற்றிக் கொண்டு இருவரும் வந்துள்ளனர். ஆனால் 3 நாட்கள் காலதாமதமாக ஏற்றிச் சென்று லோடு இறக்கியதாக தெரிகிறது.
பின்னர் நேற்று ராதாகிருஷ்ணன் லாரியை எடுத்துக் கொண்டு வேலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் செஞ்சி வீரன் சிலை அருகே லாரியை டிரைவர் ராதாகிருஷ்ணன் நிறுத்தியபோது, திடீரென அங்கு வந்த லாரி உரிமையாளர் பிரேம்குமார், 3 நாட்கள் காலதாமதமாக சென்று வந்ததால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிரைவரை திட்டியுள்ளார். அதன்பிறகு பிரேம்குமார், மது வாங்கி வந்து ராதாகிருஷ்ணன், கிளீனர் வசந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் மது அருந்தியுள்ளார்.
அப்போது போதையில் இருந்த பிரேம்குமார், ராதாகிருஷ்ணனிடம் மீண்டும் இவ்விவகாரம் தொடர்பாக கேட்டு அவரை அசிங்கமாக திட்டவே, 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழவே, கிளீனர் உதவியுடன் உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேம்குமார் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி வேலூரில் உள்ள ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேலூர் மருத்துவமனைக்கு சென்று தனது கணவர் ராதாகிருஷ்ணனின் உடலை பார்வையிட்ட மனைவி ரோகிணி, பின்னர் செஞ்சி காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அதன்பேரில் லாரி உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் கிளீனர் வசந்தகுமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்த போலீசார் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில், காலதாமதமாக சரக்கு இறக்கி வந்த ஆத்திரத்தில் அவரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்ததை பிரேம்குமார் வாக்குமூலமாக தெரிவித்தார். இதையடுத்து 2 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
‘நலம் TN’ இணையதளத்தை தொடங்கிய முதல்வர் விஜய்! நீங்களும் நன்கொடை தரலாம்…
சென்னை: ‘“டாஸ்மாக் கடையை மூடக் கோரிய பள்ளி மாணவிகளை தாக்கியதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா?” – சீமான்
திமுக – வில் பதவி பறிப்பு…! தமிழக அரசியலில் பரபரப்பு..!!!