இலவச பேருந்து திட்டத்தில் தனியார் பேருந்துகளை கொண்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை…

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக தனியார் பேருந்து கட்டண உயர்வு இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது, “2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பேருந்து கட்டணத்தில் எந்த உயர்வும் வழங்கப்படவில்லை.

ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் டீசல் விலை 64 ரூபாயிலிருந்து, 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிய பேருந்துகளின் கொள்முதல் விலை, காலாண்டு வரி, காப்பீட்டு கட்டணம், டயர்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும், மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் தனியார் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களையும் இலவச பேருந்து திட்டத்தில் கொண்டு வந்து மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பேருந்து தொழிலை நம்பி ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 4 லட்சம் பேர் வாழ்வாதாரம் மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்து துறையை காப்பாற்ற, பேருந்து கட்டணத்தை உயர்த்தி சமநிலைப்படுத்த வேண்டும். பேருந்து கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 10 பைசாவிலிருந்து, 1 ரூபாய் 20 பைசாவாக உடனடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.