மதுரை கொட்டாம்பட்டி அருகே பயங்கர சாலை விபத்து: அரசு பேருந்து – ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதல்; பெண் உட்பட 5 பேர் பலி, 41 பேர் காயம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 41 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் தெரிவித்ததாவது:
சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மையத் தடுப்பில் பலமாக மோதியது.
இதன் தாக்கத்தால் எதிர்புற சாலைக்குள் நுழைந்த ஆம்னி பேருந்து, மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையோரம் தூக்கி வீசப்பட்டு, வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதி நின்றது. இதில் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 41 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை சரக டிஐஜி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சேதமடைந்த இரு பேருந்துகளும் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories
சென்னை: பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் கயிறு அறுந்து விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு…
செல்போன் பறிப்பு: பள்ளி மாணவன் தற்கொலை: காவலர் சஸ்பெண்ட்…
பெரம்பலூர்: இரூர் கல்குவாரியில் கலெக்டர் ஆய்வு; விதிமீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு…