நெய்வேலி: நெய்வேலியில் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக விதவை பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்து 30 பவுன் நகை, ரூ.90 லட்சம் பணத்தை பறித்த தனியார் சிட்பண்ட் ஏஜென்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பி.எம்.ஆர் நகரை சேர்ந்த சின்னதுரை மகள் புவனேஸ்வரி (39). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு தனது உறவினரான முதனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜம்புலிங்கம் மகன் செல்வமணி (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. செல்வமணி நெய்வேலியில் உள்ள தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு செல்வமணி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக விவாகரத்து சான்றிதழை காட்டி புவனேஸ்வரியை மந்தாரகுப்பம் முருகன் கோயிலில் 2வது திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு செல்வமணி புவனேஸ்வரியிடம் இருந்து 30 பவுன் நகை, அவரது தந்தை சின்னதுரையிடம் ரூ.40 லட்சம் பணம், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.50 லட்சம் பணம், ரூ.62,000 மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், செல்வமணி முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும், அவர் காட்டிய விவாகரத்து சான்றிதழ் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், செல்வமணி மீது நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மோசடி பிரிவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், செல்வமணி புவனேஸ்வரியை ஏமாற்றிய பணம், நகைகளை மோசடி செய்து வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து செல்வமணியை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

More Stories
செல்போன் பறிப்பு: பள்ளி மாணவன் தற்கொலை: காவலர் சஸ்பெண்ட்…
பெரம்பலூர்: இரூர் கல்குவாரியில் கலெக்டர் ஆய்வு; விதிமீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு…
சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ வழக்கில் பிரபல நடிகர் கைது…