September 9, 2026

போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த 3,035 ஆசிரியர்கள் பணிநீக்கம்…

பாட்னா: பீகாரில் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த 3,035 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் வாங்கிய 1,400 கோடி ரூபாய் சம்பளத்தை வட்டியுடன் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த முறைகேடுகள் குறித்து மாநில கண்காணிப்பு விசாரணை பிரிவு தீவிர விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில், போலி சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து 3,035 பேர் அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பலர் போலி தகுதித் தேர்வு சான்றிதழ்கள் மற்றும் போலி பல்கலைக்கழக பட்டங்களைப் பயன்படுத்தியதும் அம்பலமானது. இதையடுத்து, அந்த போலி ஆசிரியர்கள் 3,035 பேரையும் உடனடியாக பணிநீக்கம் செய்து பீகார் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இவர்கள் கடந்த ஆண்டுகளில் சம்பளமாகப் பெற்ற சுமார் 1,400 கோடி ரூபாயை வட்டியுடன் திரும்பப் பெறவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி, ‘நீண்ட விசாரணைக்கு பின்னர், 3,035 ஆசிரியர்கள் போலி பட்டங்கள் மூலம் பணியில் சேர்ந்தது உறுதியாகியுள்ளது. போலி ஆசிரியர்களிடம் இருந்து சம்பளப் பணத்தை வட்டியுடன் திரும்பப் பெறுவது குறித்த இறுதி முடிவு விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும். இன்னும் சில விசாரணைகள் நிலுவையில் உள்ளன; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது’ என்று கூறினார்.

You may have missed