மேலூர் அருகே மனைவியை அடித்துக்கொன்று உடலை எரித்த கணவர் கைது…

மேலூர் அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவர், உடலை எரித்து சாம்பலை கிணற்றில் கரைத்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். இதற்கு உதவிய அவரது இரு நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவருக்கும் மேலூர் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திகாவுக்கும் (24) 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஒரு மகள் உள்ளார். கார்த்திகாவின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் இருந்ததால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு கார்த்திகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.அவரை சமாதானப்படுத்தி கடந்த வாரம் பிரபாகரன் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

கடந்த 3ம் தேதி தங்கள் வயலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியை அழைத்து சென்ற பிரபாகரன், அவரை அடித்துக் கொலை செய்துள்ளார். உடலை வயலிலேயே தீ வைத்து எரித்த அவர், குவிந்திருந்த சாம்பலால் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும் என நினைத்து, அதனை அள்ளிச்சென்று அருகில் உள்ள கிணற்றில் கரைத்துள்ளார்.

இந்நிலையில், நடந்த சம்பவங்களை கூறி, கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் செல்லத்திடம் நேற்று இரவு அவர் சரணடைந்தார். தகவலறிந்த மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். கொலை நடந்த இடத்திற்கு நேற்று பிரபாகரனை அழைத்துச் சென்று, நேரடி விசாரணை நடத்தினர். எஸ்பி தேவநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இந்த படுகொலைக்கு அதே ஊரைச்சேர்ந்த அவரது நண்பர்கள் கரண் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் உதவி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மனைவியை கொன்ற பிரபாகரன் மீது, ஏற்கனவே கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.