மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், மெயின் அருவியில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற அளவில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று ஐந்தருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்துடன் அடித்துவரப்பட்ட சுமார் 10 அடி நீளமுள்ள மஞ்சள் நிற சாரைப்பாம்பு, அவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்குள் வந்தது.
இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் “பாம்பு… பாம்பு…” என அலறியடித்தபடி அங்கிருந்து பதற்றத்துடன் ஓடி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஐந்தருவிக்குள் இறங்கி மிகுந்த கவனத்துடன் சாரைப்பாம்பைப் பிடித்தனர்.
அப்போது, பாம்பை கட்டுப்படுத்த முயன்றபோது அது சீறி எழுந்த காட்சி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பிடிக்கப்பட்ட சாரைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அதை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டனர். இந்தச் சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், தண்ணீருடன் சாரைப்பாம்பு அடித்துவரப்பட்ட சம்பவம் குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

More Stories
காஞ்சிபுரம் : போதை தகராறில் மகனை கொடூரமாக கொலைசெய்த தந்தை…
கடன் தொல்லையால் விபரீதம்.. மனைவி, மகள் கொலை.. திமுக பிரமுகர் தற்கொலை..
கோவை: கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் தகனம்…