ஊர் பஞ்சாயத்தில் பெண் குத்திக்கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்…

கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மாடக்கல் ஊராட்சி மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவரை, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதா கோபித்துக்கொண்டு மல்லிகைபாய் தொட்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று மதியம் ராஜேஷ், அவரது தந்தை கோவிந்தப்பா, தாயார் கெம்பம்மா மற்றும் ஊர் பெரியவர்கள் 30 பேர், மல்லிகை பாய் தொட்டி கிராமத்தில் உள்ள சுஷ்மிதா வீட்டுக்கு பஞ்சாயத்து பேசி அழைத்து செல்ல வந்தனர். அப்போது மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

ஊர் பொதுமக்கள் ஒரு புறம் பஞ்சாயத்து பேசிக்கொண்டு இருந்த போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் ஆவேசமாக குத்தினார். இதில் சுஷ்மிதா ரத்தவெள்ளத்தில் பலியானார். மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜேஷ், கர்நாடகா மாநிலம் கோடள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர்கள் தளி போலீசாரிடம், ராஜேஷை ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.