ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இருசக்கரவாகனத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா பண்டல்களை எடுத்துக் கொண்டு சாலை வழியாக வருவதாகவும் உடனே பிடிக்கும்படியும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உஷாரான போலீசார் அரக்கோணம் அடுத்த இரட்டைக் குளம் செக் போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் போலீசாரைப் பார்த்ததும் உஷாராகி வாகனத்தை திருப்ப முயன்றிருக்கிறார். உடனே அவரைப் பிடித்து சோதனை நடத்திய போது, 2 பைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் 6 கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.
உடனே அவரை பிடித்த போலீசார் அந்த இளைஞருடன் வந்த 15 வயது சிறுவனையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரித்த போது அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவர் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வருகிறார் என விசாரித்த போது போலீசாரே சற்று அதிர்ச்சியடைந்தனர். ராஜேஷ் போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தனது உறவினரான 15 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு இருசக்கரவாகனத்திலேயே ஒடிசாவுக்கு சென்றிருக்கிறார்.
ஒடிசாவில் தான் கஞ்சாவை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்ய முடியும் என்பதால், இடைத்தரகர்கள் யாரையும் நம்பாமல் தானே தனது விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு சுமார் ஆயிரத்து 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அங்கிருந்து சுமார் 6 கஞ்சா பண்டல்களை இரண்டு பைகளில் எடுத்துக் கொண்டு, மீண்டும் ஆயிரத்து 300 கிலோமீட்டர் தூரம் பைக்கிலேயே வந்துள்ளனர்.
ராஜேஷ் மொத்தம் 6 நாட்கள் 2,600 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த கஞ்சா பண்டல்களை சாலை வழியாக எந்த ஒரு செக்போஸ்டிலும் சிக்காமல் கடத்தி வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு முன்னரும் மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. ராஜேஷிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

More Stories
ராமநாதபுரத்தில் 7 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீஸ் விசாரணை…
அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க.. இயக்குநர் பாக்யராஜ் உடல் தகனம்!
வண்டலூர் அருகே அதிகாலை போலீசாரை வெட்டி தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: