வண்டலூர் அருகே அதிகாலை போலீசாரை வெட்டி தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: 

சென்னை வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் இருந்து ஆதனூர் செல்லும் சாலையோரத்தில் நேற்றிரவு 2 ரவுடிகள் கஞ்சாவுடன் பதுங்கியிருப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஓட்டேரி போலீஸ் எஸ்ஐ சதீஷ்குமார், தலைமை காவலர் ஆனந்தராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அதிகாலை 2.30 மணியளவில் போலீசாரை பார்த்ததும், 21 கிலோ கஞ்சாவுடன் ஏ பிளஸ் கேட்டகிரி பிரபல ரவுடிகளான செல்லா (எ) செல்வகுமார் (28), கனகராஜ் (35) ஆகிய இருவரும் தப்பியோட முயன்றனர்.

அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து, வேனில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது தலைமை காவலர் ஆனந்தராஜை ரவுடி செல்லா (எ) செல்வராஜ் கத்தியால் வெட்டி சரமாரி தாக்க முயற்சித்துள்ளார். இதை கண்டதும் போலீஸ் எஸ்ஐ சதீஷ்குமார், போலீசாரின் பாதுகாப்பு கருதி, ரவுடி செல்லாவின் வலதுகாலின் கீழ்ப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். ரவுடி செல்லா தாக்கியதில் படுகாயம் அடைந்த தலைமை காவலர் ஆனந்தராஜ், துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி செல்லா ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று அதிகாலை ஓட்டேரி, வால்மீகி தெருவை சேர்ந்த ரவுடிகளான செல்லா (எ) செல்வகுமார், கிளாம்பாக்கம், அறிஞர் அண்ணா காலனி பகுதியை சேர்ந்த கனகராஜ் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.