“தமிழகத்தில் இனி ஏசி பேருந்துகள் தான்.. பெண்களுக்கு இலவச பஸ் பயணம்..”

தமிழகத்தில் இனி வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார். பின்னர் முகாமில் பங்கேற்ற பெண்கள், முதியோர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், “பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். போக்குவரத்துக் கழகம் வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. நான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வருவாயை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளேன். அதேபோல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், சென்னையில் நடைபெற்ற புதிய பேருந்து சேவை தொடக்க விழாவில், “தமிழ்நாடு மக்கள் ஏசி பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்பதால் இனி ஏசி பேருந்துகளையே வாங்க வேண்டும் என்று முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்” என்று அமைச்சர் கூறினார்.