பெரம்பூருக்கு பேருந்தில் கிளம்பிய CM விஜய்! 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று 300 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு பேருந்தில் ஏறி நேரில் ஆய்வு செய்த அவரது செயல்பாடு கவனம் பெற்றதுடன், அதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக இயக்கப்பட உள்ள அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதையடுத்து, புதிய பேருந்துகளை பார்வையிட்ட அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின் பெரம்பூர் செல்லும் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் விஜய், அதன் உள்பகுதியை ஆய்வு செய்தார். பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், தனது செல்போனில் அந்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே முதலமைச்சர் பேருந்தில் ஆய்வு மேற்கொண்டு வீடியோ பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்