குழந்தை திருமணத்திற்கு ‘செக்’ வைத்த கலெக்டர்… மீறினால் ஜாமீனே கிடையாது…

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை முற்றிலும் ஒழித்து, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய மிக கடுமையான குற்றமாகும் என்று எச்சரித்துள்ளார். குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன் படி, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கும், 21 வயதிற்குட்பட்ட ஆண் மகனுக்கும் திருமணம் நடத்துவது அல்லது அதற்கு உதவி செய்வது சட்டவிரோதமான செயலாகும். இந்த திருமணங்களால் பெண் குழந்தைகளின் கல்வி, உடல்நலம், பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் இளம் வயது கர்ப்பம், உடல்நல பாதிப்புகள் மற்றும் பல சமூக சிக்கல்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகிறது என்று கலெக்டர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர், உறவினர்கள், காப்பாளர்கள், நண்பர்கள், புரோகிதர்கள், திருமண ஏற்பாட்டாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளியாக கருதப்படுவார்கள்.