ராசிபுரம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் பெண்ணிடம் துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 20பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் அம்மன்கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(58). கணவர் இறந்த நிலையில் இவர் தனியாக தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை ராசிபுரம் பகுதியில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு கலைச்செல்வி டூவீலரில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். பின்னர் அவர் கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு டூவீலரில் மர்மநபர்கள் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் கலைச்செல்வியின் வீட்டுக்குள் திடீரென நுழைந்துள்ளனர். இருவரும் முகமூடி அணிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி சத்தம் போடமுயன்றார். அப்போது அவரின் வாயில் மர்மநபர்கள் துணியை வைத்து அடைத்து உள்ளனர். மேலும் அவர்களில் ஒருவன் துப்பாக்கியை கலைச்செல்வியின் தலையிலும், மற்றொருவன் கத்தியை அவரின் கழுத்திலும் வைத்து நகை, பணத்தை எடுத்து தரும்படி மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 15பவுன் நகை, ரூ.20ஆயிரத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 5பவுன் செயினையும் பறித்துக் கொண்டு டூவீலரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி கலைச்செல்வி தனது மகளிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். பின்னர் ராசிபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். ராசிபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய கலைச்செல்வியை 2பேரும் டூவீலரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கலைச்செல்வி வீட்டுக்குள் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்து துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகையை கொள்ளையடித்துச்சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க டிஸ்பி விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுபுகுந்து பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து நேரடியாக குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி:
சுத்தம் செய்ய வேலைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு: வீட்டின் உரிமையாளர் கைது…
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு…