ஒன்றிய அமைச்சரை கண்டித்து மாணவர் சங்கம் சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகை; ஆர்ப்பாட்டம்: 

சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நீட் தேர்வுகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து நேற்று டெல்லியில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்துக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், இன்று காலை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்ஐயின் தென்மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்திந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வில் நடைபெற்ற வரும் பல்வேறு முறைகேடுகளால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர் என்று அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்திந்திய மாணவர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் இப்ராஹிமின் கழுத்தில் போலீசார் இடித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பிய மாணவர் சங்கத்தினரை போலீசார் விரட்டியடித்தனர். மேலும், சங்க நிர்வாகிகள் உள்பட பலரை குண்டுக்கட்டாக கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.