புழல் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2வது கணவர் உட்பட 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புழல் அருகே கிராம பகுதியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருக்கும், கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பார்ஹத் என்பவரை இளம்பெண் 2வது திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் 2வது கணவரான பார்ஹத், இளம்பெண்ணின் 15 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள் ளார். இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், பார்ஹத்தை திட்டியுள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து வெளியில் சொன்னால், மகளை காரில் கடத்தி சென்று நாசம் செய்து விடுவோம் என 2வது கணவர் பார்ஹத் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் அளித்தார். போலீசார் கடந்த 4ம் தேதி போக்சோ, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், 2வது கணவர் பார்ஹத் மற்றும் கூட்டாளிகள் பிரியா, ஷாம்லி, ஜோசப் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 நாட்களாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமியின் தாய், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சென்னை கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதனிடையே, 4 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறுமியின் தாய் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர்.

More Stories
ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி கைது…
கணவன் என்று பொய் சொல்லி அட்மிட்… சிசிடிவியால் அம்பலமான விபத்து நாடகம்:
தண்ணீர் பந்தல் அமைப்பதில் எல்லைப் பிரச்சினை… தவெக-திமுக இடையே வெடித்த மோதல்…