ஓட்டலில் பயங்கர தீ 21 பேர் உயிரிழந்த வழக்கில் கட்டிட உரிமையாளர் கைது…

டெல்லியில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்த பயங்கர தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் கட்டிட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹவுஸ் ராணி பகுதியில் மிகவும் பிரபலமான ப்ளோரிஷ் ஸ்டே பி அன் பி என்ற ஓட்டல் மற்றும் உணவக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டலில் சிக்கியவர்கள் அலறி துடித்தனர். இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்புவதற்காக சிலர், மேல்தளங்களிலிருந்து குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தகலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர். இந்த தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டலில் சிக்கி தவித்த 40 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் காயத்துடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 10 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது

சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த ஓட்டல் தேவையான தீயணைப்பு பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஓட்டல், டெல்லி தீயணைப்பு துறையிடம் இருந்து எவ்வித தீ பாதுகாப்பு சான்றிதழும் பெறாமல் இயங்கியுள்ளது.

வெறும் 6 அறைகள் நடத்த மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், அந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக 25 அறைகள் அமைக்கப்பட்டு ஓட்டல் நடத்தப்பட்டுள்ளதும், கட்டிடத்தின் தரைதளத்தில் விதிகளை மீறி அறைகள் அமைக்கப்பட்டுள்ளதும், உரிமம் இல்லாத சட்ட விரோத உணவகம் இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவசர காலத்தில் வெளியேற முறையான வழிகள் இல்லை என்பதும் உறுதியானது. இதனால், பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தீ விபத்துக்கு பிறகு ஓட்டல் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளரான லவ்கேஷ் பஜாஜ் தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரை கண்டுபிடிக்க ‘லுக் அவுட் சர்குலர்’ வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அலட்சியம் மற்றும் மனித உயிரிழப்புக்கு காரணமான குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் சர்தார் தரன்ஜித் சிங் சந்து, நகரம் முழுவதும் ஓட்டல்கள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வணிக கட்டிடங்களில் ஒரு மாத கால தீ பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்