September 10, 2026

என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” – தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு…

சென்னை திரு.வி.க நகர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.பல்லவி, தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் தனது கட்சியின் சுருக்கப் பெயரான ‘TVK’ என்று பெயர் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

8 மாத கர்ப்பிணியாக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து, தற்போது எம்.எல்.ஏ-வாகவும், அம்மாவாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் பல்லவியின் இந்த அறிவிப்பு தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டவர் 36 வயதான எம்.ஆர்.பல்லவி. 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், விஜய் கட்சி தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். மகப்பேறு காலம் நெருங்கிய நிலையிலும், சற்றும் சோர்வடையாமல் தொகுதி முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவரின் இந்த அர்ப்பணிப்பு தொகுதி மக்களிடையே பெரும் அனுதாபத்தையும் ஆதரவையும் ஏற்படுத்தியது.

சென்னை மாநகரின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான திரு.வி.க நகரில் பலத்த போட்டிக்கு இடையே பல்லவி நிகழ்த்திய சாதனை அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியது. திமுக வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திரு.வி.க நகர் தொகுதியை தவெக-வின் கோட்டையாக மாற்றிக் காட்டினார் பல்லவி

தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெகவின் பல்லவி திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு அரசியல் முகவரியும், சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் வழங்கிய கட்சிக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் நன்றி செலுத்தும் விதமாக, தனது மகனுக்கு ‘TVK’ என்று பெயர் வைக்கப் போவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதாவது, தனது மகனுக்கு தமிழன் வெற்றி கொண்டான் (TVK) என பெயர் சூட்டப்போவதாகக் கூறியுள்ளார் திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ பல்லவி.

You may have missed