குமாரபாளையம் அருகே, காப்பரான் மலைக்கு செல்லும் மலைப்பாதையில், பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். அவரை அடித்து கொலை செய்து, சடலத்தை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில், பல்லக்காபாளையம் அருகே காப்பரான் மலை என்ற சிறு மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வர சரியான பாதை இல்லை. மழை வெள்ளத்தால் மண்பாதை முழுவதும் கூழாங்கற்கள் நிறைந்துள்ளதால், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாது.
சிறப்பு நாட்களில் இந்த பாதையில் பக்தர்கள் நடந்து சென்று, சுவாமி தரிசனம் செய்து வருவார்கள். 5 வளைவுகளை கொண்ட இந்த கோயில் மலைப்பாதையில், 3வது வளைவின் திருப்பத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். மலைப்பாதையின் வெளிப்பகுதியில் சுமார் 30 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை
இவர் பல நாட்களாக இதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சுற்றித்திரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரான இவர், இரவு நேரத்தில் இப்பகுதியில் மக்கள் வசிப்பிடங்களில் சுற்றித்திரிந்ததால், அச்சப்பட்ட யாராவது அடித்து கொலை செய்து, சடலத்தை கொண்டு வந்து மலைப்பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More Stories
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!