September 10, 2026

பொருட்காட்சிக்கு அழைத்து சென்று சிறுமி கூட்டு பலாத்காரம் 4 சிறுவர்கள் கைது:

திருமங்கலத்தில் 13 வயது சிறுமியை பொருட்காட்சிக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 சிறுவர்கள் கைதாயினர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. பள்ளி படிப்பை இடையில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 24ம் தேதி திருமங்கலத்தில் நடந்து வரும் பொருட்காட்சிக்கு சிறுமியை, சிறுவன் அழைத்துச் சென்றார்.

உடன் அவரது நண்பர்களான 16 வயது சிறுவர்கள் இருவர், 13 வயது சிறுவன் ஒருவர் சென்றுள்ளனர். அனைவரும் பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் பொருட்காட்சிக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை 4 சிறுவர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு வந்த பின்பு அக்காவிடம் கூறி அழுதுள்ளார். அவர் தனது தாயிடம் கூறவே, சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து 16 வயது சிறுவர்கள் 3 பேர், 13 வயது சிறுவன் ஒருவர் என 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனை நடத்திய பின்பு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு 4 சிறுவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மருத்துவ பரிசோதனை முடிவில்தான் சிறுமி பாலியல்ரீதியாக மட்டும் துன்புறுத்தல் செய்யப்பட்டாரா? அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும்’’ என்றனர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed