September 10, 2026

மதுபோதையில் வாகன தணிக்கை: எஸ்ஐயிடம் எஸ்பி விசாரணை…

மதுபோதையில் சிறப்பு எஸ்ஐ வாகன தணிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி விசாரணை நடத்த உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மஷார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது பைக் கடந்த 20ம்தேதி திருட்டு போனதாக ஏழுமலை, மறுநாள் வழக்கறிஞர் பிரசன்னாவுடன் கடலாடி போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஏழுமலை, தனது வழக்கறிஞர் பிரசன்னாவுடன், கலசப்பாக்கம் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி உதயகுமாரிடம், நீதிமன்ற உத்தரவு பெற்று கடலாடி காவல் நிலையம் சென்றார். செல்லும் வழியில் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் அருகே ஜம்னாமரத்தூர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், கடலாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், முதல்நிலை போலீஸ்காரர் குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து ஏழுமலை, நீதிபதி வழங்கிய உத்தரவை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜிடம் வழங்கினார்

அப்போது காமராஜ், அந்த உத்தரவை பெறாமல், இங்கு எதுவும் செய்ய முடியாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் காவல் நிலையத்திற்கு வாருங்கள் எனக்கூறினாராம். அப்போது அவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கறிஞர் பிரசன்னா, காமராஜ் மதுபோதையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவது குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவ்வாறு பதிவு செய்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பி சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜிடம் விசாரணை நடத்த உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

You may have missed