பெங்களூருவில் உணவுப் பொருட்கள் விலை 60% உயர்வு.?  வேலை இழப்புக்கும் வாய்ப்பு?

அடுத்த சில மாதங்களில் பெங்களூருவில் உணவுப் பொருட்களின் விலை படிப்படியாக 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில ஹோட்டல் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூருவில் ஹோட்டல் உணவுகளின் விலை விரைவில் பெரிய அளவில் உயரக்கூடும் என்ற தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை படிப்படியாக 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில ஹோட்டல் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பல உணவகங்களில் ₹80க்கு விற்கப்படும் மசாலா தோசையின் விலை ₹150 வரை உயரலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ₹50க்கு கிடைக்கும் இட்லி விலை ₹80க்கும் அதிகமாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சைவ உணவுகள் தற்போது ₹150 முதல் ₹200 வரை விற்கப்படும் நிலையில், அவை ₹250 முதல் ₹300 வரை உயரக்கூடும் என ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ₹300 முதல் ₹350 வரை இருக்கும் சிக்கன் பிரியாணி விலை ₹500 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் முறைசாரா தொழிலாளருக்கான மாத ஊதியம் ₹23,000ஐ தாண்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஊதியம் மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கான காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, உணவு, தங்கும் வசதி மற்றும் சீருடை செலவுகளையும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்க வேண்டியுள்ளது. இதனால் ஒரு ஊழியருக்கான மொத்த செலவு ₹36,000 வரை செல்வதாக கூறப்படுகிறது. இதனால் சிறிய உணவகங்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைவரும் கடும் பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர்.

எரிபொருள் விலை உயர்வும் உணவக துறைக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக சோனா மசூரி அரிசி கிலோவுக்கு ₹5 வரை உயர்ந்துள்ளதாகவும், ஜீரா அரிசி கிலோவுக்கு ₹10 வரை அதிகரித்துள்ளதாகவும் ஹோட்டல் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தினசரி பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருட்களின் தயாரிப்பு செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் நேரடியாக வாடிக்கையாளர்களின் உணவுக் கட்டணத்தில் பிரதிபலிக்க தொடங்கும் என கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 60,000 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இயங்கி வருகின்றன. அதில் 15,000க்கும் அதிகமானவை ஹோட்டல் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன.

இவை பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமல்லாமல் சாதாரண டிபன் கடைகள், மெஸ் உணவகங்கள், டேக் அவே மையங்கள் உள்ளிட்ட பல சிறிய தொழில்களையும் உள்ளடக்கியவை என்பதால் இந்த விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஹோட்டல்கள் ஊழியர் எண்ணிக்கையை குறைக்கும் முடிவையும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை உயர்த்தாமல் செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.

உணவுப் பொருட்களின் புதிய விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்றே ஹோட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெங்களூருவில் தினசரி ஹோட்டல் உணவை நம்பி வாழும் மக்கள் தற்போது கவலையில் உள்ளனர். அடுத்த சில மாதங்களில் உணவகங்களில் சாப்பிடுவது சாதாரண மக்களுக்கு கூடுதல் செலவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.