“குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது.” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரையில் உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பம் உள்ளது. வாகன காப்பக பகுதியில் இன்று அதிகாலை 17 வயதான குபேந்திரன் என்ற சிறுவன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், அந்த வாகன காப்பக பகுதிக்கு இன்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்தது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் குபேந்திரனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் சிறுவன் குபேந்திரன் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து தீவிர விசாரணை தொடங்கிய போலீசார், சிறுவனை கொலை செய்த முத்துமணி என்ற இளைஞர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
சித்திரை திருவிழாவில் சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட முன்விரோதம் காரணமாக சிறுவன் குபேந்திரனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துமணி கொலை செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொலையான சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தி.மு.க. எம்.பி கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில், “மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், “நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா? தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
தேர்தலின் போது தி.மு.க ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கைப் பற்றி கடுமையாக விமர்சித்த திரு. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அதைத் தானே சரி செய்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?” என்றும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?