விஜய் உத்தரவால் விரைவில் விடுதலை ஆனேன்: சவுக்கு சங்கர் பேட்டி…

தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள இந்த கூட்டணி ஆட்சி, 5 ஆண்டுகள் முழுமையாக, தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், முதல்வர் விஜய் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தனது சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் தி.மு.க. செய்த ஊழல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வீடியோ வெளியிட்டவர் சவுக்கு சங்கர். இவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையில், பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடையில் அவரது அம்மா இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிலைக்கு தற்போது தமிழக அரசு முடிவு கட்டியுள்ளது. 

சமீபத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற த.வெ.க தலைவர் விஜய், சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தற்போது அவர் சிறையிவல் இருந்து வெளியில் வந்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட முன்னேற்ற கழகத்தை தூக்கி எறிந்ததன் மூலம், கொளத்தூரில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை மண்னை கவ்வ வைத்தன் மூலம், தமிழக மக்கள் ஒரு அற்புதமாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 

அந்த தீர்ப்பை சரியானமுறையில் புரிந்துகொண்டு, முதல்வர் விஜய் அவர்கள் இதுவரை ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்று நான் செய்தித்தாள்களில் பார்த்து தெரிந்துகொண்டேன். தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள இந்த கூட்டணி ஆட்சி, 5 ஆண்டுகள் முழுமையாக, தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று எனது விருப்பமாக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கமாக குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அந்த ஆர்டர் சிறைக்கு வர 8-10 நாட்கள் ஆகும். ஆனால் திங்கள் கிழமை ரத்து செய்யப்பட்டு புதன் கிழமை ஆர்டர் சிறைக்கு வந்துவிட்டது. இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் அவர்களே தலையிட்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று உத்தரவிட்டதன் விளைவாகத்தான் நான் இவ்வளவு விரைவாக உங்கள் முன் பேசிக்கொண்டு இருக்கிறேன். நாட்டில் என்ன நடக்கிறது என்று கடந்த 5 ஆண்டு காலம் அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்ததால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார். 

இதை பார்த்து தான் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று எதிர்கட்சிகள் அனைத்தும் பிரச்சாரம் செய்தன. இதனால் தான் முதல்வர் விஜய் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த 3 ஆண்டுகளில் சவுக்கு மீடியா ஊழியர்கள் ஒவ்வொருவரும் சந்தித்த பிரச்னைகள் என்ன? என் தாயார் என் இப்படி அகால மரணம் அடைய வேண்டும்? த.வெ.க.வினரும் முதல்வர் அவர்களும் பார்த்துக்கொண்டு தான் இருந்திருப்பார்கள். அதனால் அருண் ஐ.பி.எஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.