தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
உணவு சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.” இவ்வாறு அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உணவுகளை அருந்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னை மாவட்டத்திற்கு வேலைத் தேடுவதற்காக வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ஊழியர்கள், சாலையோரம் வசிப்பவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் அம்மா உணவகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் .
கடந்த 2013- ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது ‘அம்மா உணவகம்’. முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில், பின்னர் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளில், மாநகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகும் இந்த அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.
அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் சுடச்சுட உணவுகள் கிடைப்பதுடன் மலிவு விலையில் உணவுகள் கிடைப்பதே சிறப்பு. காலையில், மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் உணவுகள் வழங்கப்படுகிறது. இட்லி ரூபாய் 1- க்கும், வெண்பொங்கல் ரூபாய் 5- க்கும், தயிர் சாதம் ரூபாய் 3- க்கும், மற்ற கலவை சாதங்கள் ரூபாய் 5- க்கும், சாம்பாரும் கூடிய இரண்டு சப்பாத்தி ரூபாய் 3- க்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?